search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய வர்த்தக மந்திரி"

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு, 45 ஆண்டுகால பிரச்சினை என மத்திய வர்த்தக மந்திரி சுரேஷ் பிரபு கூறினார். #Petrol #Diesel #Suresh Praphu
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இது அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்து வருகிறது.

    இந்த விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் இறங்கி உள்ளன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி நாளை (திங்கட்கிழமை) நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து உள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.



    ஆனால் இந்த பிரச்சினை இன்று நேற்று உருவானதல்ல எனவும், நீண்டகாலமாக இருக்கும் பிரச்சினை என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி சுரேஷ் பிரபு கூறியுள்ளார். டெல்லியில் நடந்த பசுமை எரிபொருள் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    எண்ணெய் விலை உயர்வு விவகாரம் 45 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாக உருவெடுத்தது. அந்தவகையில் இது 45 ஆண்டுகால பிரச்சினை ஆகும். எனவே இந்த பிரச்சினையை சமாளிக்க எரிபொருள் ஆதாரத்தை மாற்றியமைப்பது குறித்து நீண்ட காலத்துக்கு முன்பே இந்தியா சிந்தித்து இருக்க வேண்டும்.

    போக்குவரத்து நடைமுறையில் மாற்று எரிபொருள் ஆதாரத்தை பயன்படுத்த வேண்டும். இதற்காக அதிவேக ஹைப்பர்லூப் போக்குவரத்து திட்டம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஒட்டுமொத்த போக்குவரத்து நடைமுறையையும் மாற்றுவதற்கு முன், இடைக்கால தீர்வாக எரிபொருளை மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

    சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து எது? என்பது குறித்து மக்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்படுவதே தற்போதைய தேவை. தேசிய உயிரி எரிபொருள் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருப்பது பாராட்டுக்குரியது. உயிரி எரிபொருளை முன்னிலைப்படுத்துவதில் இந்திய பசுமை எரிபொருள் கூட்டமைப்பு முக்கிய பங்காற்றுவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

    எண்ணெய் மற்றும் கியாஸ் வணிகமானது நீண்ட காலத்துக்கு முன்னே கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்யும் தொழிலாக மாறிவிட்டது. எனவே மாற்று எரிபொருள் குறித்து நாம் சிந்தித்தால் இந்த பணம் வீணாகிவிடும். ஆனால் இத்தகைய எரிபொருளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்து நமக்கு தெரியும். எனவே மாற்று எரிபொருள் குறித்து சிந்திப்பதை தவிர வேறு வழியில்லை.

    பசுமைக்கூட வாயுக்கள் உற்பத்தியை குறைப்பதில் தூய்மையான உயிரி எரிபொருள் முக்கிய பங்காற்றுகிறது. எனவே இத்தகைய தூய மற்றும் பசுமை எரிபொருளை நோக்கி மக்களை திருப்புவதில் பசுமை எரிபொருள் கூட்டமைப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு சுரேஷ் பிரபு கூறினார்.  #Petrol #Diesel #Suresh Praphu
    ×